மூணாறு தலைப்பில் 2 ஆண்டாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிவீசுமா?

நீடாமங்கலம், ஜன.11: நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பில் 2  ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிவீச வேண்டுமென வாகனஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில்  உள்ளது. மூணாறு தலைப்பு இங்கு கல்லணையிலிருந்து பிரியும் பெரிய வெண்ணாறு  வந்து பாமனியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு என 3 ஆறுகள் பிரிந்து சுமார்  4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்கு 50 ஆண்டுகளுக்கு  முன் கட்டப்பட்ட பயணிகள் மாளிகை மிகவும் சேதமடைந்தது.அருகில் புதிய  அலுவலகம் கட்டப்பட்டு பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு  இயற்கையான 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளன. இயற்கையான சூழல் உள்ளதால் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா 110  விதியின்படி சுற்றுலாதளமாக மாற்றப்படும் என அறிவித்தார். அதன் பிறகு 3 ஆறுகளிலும் உள்ள சட்ரஸ்களை சரி செய்து அங்கு உயர் கோபுர விளக்கு  அமைக்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலாதளமாக்கும் பணி கிடப்பில்  போடப்பட்டது. அங்கு அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு சிறிது காலம் எரிந்து  அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பளுதடைந்துள்ளது. இந்த விளக்கால்  விவசாயத்திற்கு சட்ரஸ் திறக்கும்போது பணியாளர்கள் சிரமமின்றி  திறந்தனர். தற்போது சட்ரஸை திறக்கும்போது தடுமாறுகின்றனர்.அப்பகுதியில்  உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் இருசக்கர வாகனங்களில்  அப்பகுதி வழியாக எளிதாக நீடாமங்கலம் வந்து செல்வார்கள். மின்விளக்கு எரியாததால்  மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறையினர் மூணாறு தலைப்பில் 2  ஆண்டுகளுக்கு மேலாக  எரியாத உயர் கோபுர மின் விளக்கை சீரமைத்து எரியவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: