கூலி உயர்வு, 20 சதவீத போனஸ் கோரி கைத்தறி நெசவுத் தொழிலாளர்கள் உண்ணாவிரத போராாட்டம்

மதுரை, ஜன. 11: கூலி உயர்வு, 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி மதுரையில் கைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக, நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மதுரையில் கிருஷ்ணாபுரம் காலனி, கைத்தறி நகர், திருப்பரங்குன்றம், வில்லாபுரம், லட்சுமிபுரம் போன்ற பகுதிகளில் அனைத்து நைஸ்ரக கைத்தறித் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான உடன்பாடு ஏற்படும். பழைய ஊதிய உடன்பாடு, கடந்தாண்டு, நவ.5ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, இவர்களுக்கு, 40 சதவீத கூலி உயர்வும், 20 சதவீதம் போனசும் வழங்க வேண்டும். இதற்காக புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என நெசவுத் தொழிலாளர்கள் கோரி வந்தனர்.

இதுதொடர்பாக நெசவு உற்பத்தியாளர் சங்கத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. அதில் முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதுவும் தோல்வியில் முடிவடைந்தது.இதனால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ம் தேதி முதல் நெசவுத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆறாவது நாளாக நேற்று அனைத்து நைஸ் ரக கைத்தறி தொழிலாளர்களின் ஐக்கிய குழு சார்பில் மதுரை அண்ணாநகரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்திற்கு ஐக்கிய குழு தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். இதில் தொமுச, ஐஎன்டியூசி, சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ரவீந்திரநாத், பத்மநாபன், சுதர்சன், ஜெகநாதன் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: