மாடுகளுக்கு அளவாகவே பொங்கல் கொடுங்கள் அமிலநோய் ஏற்படலாம்

திண்டுக்கல், ஜன. 11: பொங்கலன்று கால்நடைகளுக்கு அளவாகவே பொங்கல் வழங்க வேண்டும். இல்லையென்றால் அமிலநோய் ஏற்பட்டு இறப்பு ஏற்படலாம்.சக உயிர்களிடம் அன்பு கொண்டு உயர்ந்த வாழ்வினை வாழ்பவர்கள் தமிழர்கள். இதற்கு பொங்கல் திருநாளே உதாரணம். இந்நாளில் கால்நடைகளுக்கு சிறப்பு செய்வது வழக்கம். நன்றியையும், அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் இவற்றிற்கு பொங்கலை உணவாக கொடுப்பது வழக்கம். அதிகமாக இவற்றை கொடுத்தால் கால்நடைகளுக்கு அமிலநோய் எனும் ஆபத்து ஏற்படும். நெல், அரிசிச்சாதம், அரிசி, கோதுமை, ஓட்டல் கழிவு பொருட்கள், விருந்து போன்றவற்றை கால்நடைகளுக்கு அதிகமாக கொடுக்கக்கூடாது. இதனால் பாதிப்பு ஏற்படும் என்று கால்நடை பராமரிப்புத்துறை முன்னாள் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அதிக அடர்த்தியில் உள்ள மாவு பொருட்களினால் வயறு உப்புசம் உண்டாகும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கால்நடைகள் இறக்க நேரிடலாம். கால்நடைகளை பொறுத்தளவில் வழக்கமாக சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களை பழக்கப்படுத்தி கொள்பவை. இதில் திடீர் மாறுதல் செய்யும் போது வயறு உப்புசம், அலர்ஜி போன்ற திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடல்நலனிற்கு கேடு ஏற்படும்.

அமிலநோயினால் அதிகப்படியான லேக்டிக் அமிலம் வயிற்றில் சுரக்கும். இதனால் செரிமான பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு வயிற்று வலி ஏற்படும். வயிற்றுப்பகுதியில் காலை உதைத்து கொள்ளும். நடையில் தடுமாற்றம், பார்வைக்குறைபாடு, கெட்டவாடையுடன் கழிச்சல் ஏற்படும். பின்பு 3 நாட்களில் கால்நடைகள் இறக்க நேரிடலாம். அமிலநோய் பாதித்த கால்நடைகளுக்கு 2 நாட்களுக்கு தண்ணீர் தரக்கூடாது. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 7.5 சதவீத சோடியம் பைகார்பனேட் கரைசலை ரத்தத்தில் செலுத்த வேண்டும். மருத்துவர் கண்காணிப்பின்படி ஹிஸ்டபைன் மருந்து, வைட்டமின் பி1, டெட்ரா சைக்கிளின் மருந்து கொடுக்காலம்.ஆடு வெட்டும் இடங்களில் ஆடுகளில் ரூமன் எனப்படும் வயிற்றில் இருந்து தள்ளப்படும் கரைசலை சேகரித்து வெதுவெதுப்பான நீரில் கலந்து வடிகாட்டி கால்நடைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். இதுபோன்ற சிரமங்களை குறைக்க உழவர்கள் தங்கள் வீட்டு கால்நடைகளுக்கு பொங்கலன்று அளவான அளவிற்கு பொங்கல் கொடுக்கலாம். இதன்மூலம் அதற்கும் இனிய பொங்கலாக அந்நாள் அமையும்’’ என்றார்.

Related Stories: