தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது

புதுச்சேரி, ஜன. 11: புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தின் எதிர்புறத்தை தற்போது அரசியல் கட்சிகள், அரசு ஊழியர்கள், பொதுநல அமைப்புகள் ஆகியோர் முழு போராட்டக்களமாக மாற்றிவிட்டனர். முன்பெல்லாம் மத்திய அரசை கண்டித்து நடத்தப்படும் போராட்டங்கள் மட்டும் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெறும். ஆனால் தற்பொழுது எந்த போராட்டமானாலும் அனைவரும் தலைமை தபால் நிலையத்தின் எதிர்புறம்தான் நடத்துகின்றனர். இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். சில சமயம் காவலர்கள் பேரிகார்டு அமைத்து அச்சாலை முழுவதையும் அடைத்து விடுவதால் பொதுமக்கள் அவசர தபால் அனுப்ப முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

 போராட்டக்களமாக மாறி வரும் தலைமை தபால் நிலையத்தின் அருகே புதுச்சேரி முக்கிய சுற்றுலா தலங்களான மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், பாரதி பூங்கா மற்றும் கவர்னர் மாளிகை, சட்டப்பேரவை ஆகியவை அமைந்துள்ளதால், போராட்டக்காரர்களால் இவற்றுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் காவலர்கள் நிறுத்தப்படுகின்றனர். இதனால் காவலர்கள் பிற பணிகளில் ஈடுபட முடியாமல் கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. எனவே போராட்டக்காரர்களுக்கு தலைமை தபால் நிலையம் தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம், பிற மத்திய அரசு அலுவலகங்கள் அருகே போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். இந்த மனுவின் நகலை சீனியர் எஸ்பிக்கும் (சட்டம் - ஒழுங்கு) அனுப்பியுள்ளார்.

Related Stories: