பிளாஸ்டிக் பையால் தகராறு

திருக்கனூர், ஜன. 11: புதுச்சேரியில் உள்ள தமிழக எல்லை பகுதியில் திருக்கனூர் அமைந்துள்ளது. இது புதுச்சேரியில் வளர்ந்து வரும் பகுதியாக திகழ்கிறது. இங்கு மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம், அரசு கிளை நூலகம், உழவரகம், பாசிக் உரக்கடை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், திருமண நிலையங்கள், கால்நடை மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், மார்க்கெட்டிங் கமிட்டி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மேலும், இது எல்லை பகுதி என்பதால், 13 மதுபான கடைகளும் இயங்கி வருகின்றன. இதனால் திருக்கனூர் மட்டுமல்லாமல் அதனை சுற்றி

யுள்ள தமிழக பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்றாட தேவைக்காக திருக்கனூர் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது.

 இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் தமிழக பகுதியில் உள்ள கடை மற்றும் உணவகங்களில் பிளாஸ்டிக் கவர், டீ கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, துணி பை, வாழை இலையை பயன்படுத்த வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் துவங்கிவிட்டனர். இந்த நிலையில் திருக்கனூர் கடை வீதியானது ஒருபுறம் தமிழகத்திலும், மற்றொரு புறம் புதுச்சேரியிலும் உள்ளது. இதில் தமிழக பகுதியில் உள்ள மளிகை கடை, டீ கடை, உணவகம், இறைச்சி கடை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதில்லை. பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களையும் துணி பை கொண்டு வருமாறு வியாபாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மற்றொரு புறம் உள்ள புதுச்சேரி கடைகளில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை போட்டு வியாபாரிகளுக்கு வழங்குகின்றனர். இதனால் தமிழக கடைகளை தவிர்த்துவிட்டு பொதுமக்கள் புதுச்சேரியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இருப்பினும், அத்தியாவசிய பொருட் களுக்காக பிளாஸ்டிக் பையுடன் தமிழக பகுதி கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். அப்போது, துணி கொண்டு வந்து பொருட்களை வாங்கி செல்லுங்கள். பிளாஸ்டிக் பை எடுத்து வந்தால் பொருட்களை தரமாட்டோம். மீறினால் அதிகாரிகள் எங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என வியாபாரிகள் கூறுகின்றனர். அதனை வாடிக்கையாளர்கள் ஏற்காமல் வியாபாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழக பகுதி வியாபாரிகள் தினந்தோறும் வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுவை அரசு பெரும்பாலான விஷயங்களில் தமிழகத்தைத்தான் பின்பற்றி வருகிறது. தற்போது தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கை தடை செய்தால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் காக்க முடியும். எனவே, புதுவையிலும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: