நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழில்

வில்லியனூர், ஜன. 11: மண்பாண்டம் செய்வதற்கு மண் உள்ளிட்ட மூலப்பொருட்கள் கிடைக்காததால் மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் மண் பானையில் தான் சமையல் செய்வது வழக்கம். இன்றளவும் கூட மண்பானை சமையலை விரும்புபவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கு காரணம் இதில் சமைத்த உணவின் ருசியும், ஆரோக்கியமும் தான். பொங்கல் பண்டிகையும், மண் பானையும் பிரிக்க முடியாதவை. புதுப்பானையில் புதுஅரிசி கொண்டு பொங்கலிட்டு தை மகளை வரவேற்பதே பழந்தமிழரின் வழக்கம். மண்பானை பயன்பாடு அறிவியல் ரீதியாக ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மண்பானைகளில் உள்ள நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை ஆரோக்கியமாக சமைக்க உதவுகிறது.

நவ - நாகரீகம் என்ற பெயரில் வீடுகளில் அலுமினியம், பித்தளை, எவர்சில்வர், வெள்ளி பாத்திரங்கள், பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அலங்கரித்து சமையலறையை ஆக்கிரமிக்கிறது. இதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக மண் பாண்டம் செய்வதற்கு மண் உள்ளிட்ட மூலப்

பொருட்கள் கிடைக்காததால் மண்பாண்ட தொழில் தற்போது நலிவடைந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. மண், தேங்காய் மட்டை, கரும்பு சோலை, விறகு உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு, மண்பாண்ட தொழிலை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறது.இருப்பினும் பாரம்பரிய தொழிலை கைவிட மனமில்லாத அத்தொழிலாளர்கள் மனம் தளராமல் மண்பாண்ட பொருட்களை நம்பிக்கையோடு உற்பத்தி செய்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தொழிலாளர்கள் மண்பாண்ட தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட பொருட்கள் செய்வதற்கு முக்கிய மூலப்பொருள் களிமண் தான். கடந்த காலங்களில் மூலப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்தது. ஆனால் தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு லோடு ரூ. 2 ஆயிரத்துக்கு விற்ற களிமண், தற்போது ரூ.6 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தி கெடுபிடி செய்கின்றனர். மண்ணை சுடுவதற்கான தென்னை மட்டைகள், ைவக்கோல் போன்ற தீ மூட்டும் பொருட்களும் கிடைக்கவில்லை. இத்தொழிலில் இளைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில்லை, போதிய வருமானம் கிடைக்காததே இதற்கு காரணம். நவீன வளர்ச்சி என்ற பெயரில் இத்தொழிலை பின்னுக்கு தள்ளிவிட்டு சுண்ணாம்பு சூளை, கூடை பின்னல் போன்ற நலிவடைந்து வந்து வரும் தொழில்களில் மண்பாண்ட தொழிலும் சேர்ந்துள்ளது. இந்நிலை நீடித்து வந்தால் எதிர்வரும் காலத்தில் பொங்கல் வைப்பதற்கு மண் பானைகள் கிடைக்காது. பானைகள் அரியவகை பொருளாகவே மாறிவிடும், என்றனர்.

Related Stories: