விபத்துகளில் உயிர் பலியாவதை தடுக்க ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும்

நாகர்கோவில், ஜன.11: விபத்துகளில் உயிர் பலியாவதை தடுக்க வாகன ஓட்டுநர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்று எஸ்.பி நாத் உத்தரவிட்டுள்ளார். நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் அவசியம் தொடர்பாக காவலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி நாத் கலந்துகொண்டு வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி முகாமை தொடக்கி வைத்து பேசியதாவது:

விபத்து நடைபெற முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளது. ஒன்று நாம் பயணம் செய்யும் சாலை காரணமாக இருக்கிறது. மற்றொன்று ஓட்டுநர்களால் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களின் மோசமான நிலையாலும் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்துகளை தவிர்க்க ஓட்டுநர்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தடுக்கலாம். டிரைவர் போதையுடன் வாகனம் ஓட்டுவது, மன அழுத்தத்தில் வாகனம் ஓட்டுதல், அதிவேகத்தில் செல்லும்போதும் விபத்து ஏற்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. ஒரு சில வாகனங்களால் மட்டுமே விபத்துகள் ஏற்படுகிறது.

சாலை அனைவருக்கும் பொதுவானது. அனைத்து வாகனங்களிலும் விபத்து ஏற்படுவது இல்லை. ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்பதால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சாலையோரத்தில் சுவர், மின்கம்பம் போன்றவற்றில் வாகனங்கள் சுயமாக மோதி உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுகிறது. பைக்கில் 40 கி.மீ வேகத்திற்கு குறைவாக செல்லும்போது சுவரில் மோதுதல், மரத்தில் மோதுதல் போன்றவற்றில் உயிர் இழப்புகளை தடுக்கலாம். வேகமாக செல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும். உயிர் பலி நிகழாமல் தடுக்க இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். தலையில் காயம்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதனை போன்று கார் ஓட்டுகின்றவர்கள் சீட் ெபல்ட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும். நமக்கு குடும்பம், குழந்தைகள் உள்ளதை நினைவில் கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 நிகழ்ச்சியில் ஏஎஸ்பி ஜவஹர், பயிற்சி ஏஎஸ்பி கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின் ராஜ், சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், டாக்டர் மரியசுபின், பேராசிரியர் வேணுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாமில் ஏராளமான போலீசாரும் கலந்துகொண்டனர். பயிற்சி முகாம் இன்றும் நடைபெறுகிறது.

Related Stories: