கன்னியாகுமரியில் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம்

கன்னியாகுமரி, ஜன. 11: இந்தியாவின் தென் எல்லைப் பகுதி என்பதை அடையாளப்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் எம்.பி.யின் சுற்றுலா மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ₹16 லட்சம் செலவில் இக்கொடிக்கம்பம் அமைய உள்ளது. இக்கொடி கம்பம் அமைக்க மாவட்ட கலெக்டர் பிரசாந் மு.வடநேரே உத்தரவின் பேரில் காந்தி மண்டபத்தின் எதிரேயுள்ள முக்கோணப் பூங்கா மற்றும் பழைய பஸ்நிலைய சந்திப்பு ஆகிய இடங்களை அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தியாவிலேயே உயரமான கொடிகம்பம் (365 அடி)  கர்நாடக மாநிலம் பெலகாவியில் அமைந்துள்ள கோட்டை ஏரிக்கரையில் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் வாகா எல்லைப்பகுதியில் 360 அடி உயரத்தில் தேசியக்கொடி கம்பம் அமைந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலம் கோலாக்பூர் பகுதியில் 303 அடி உயரத்திலும், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகேயுள்ள பஹாரி மந்திர் பகுதியில் 293 அடி உயரத்திலும், தெலுங்கானா மாநிலம் ஹூசைன்சாகர் ஏரிக்கரையில் 291 அடி உயரத்திலும், சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதி டெலிபந்தர் ஏரிக்கரையில் 269 அடி உயரத்திலும், ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள டவுண்பார்க் பகுதியில் 250 அடி உயரத்திலும் தேசியகொடிக் கம்பங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: