கொல்லங்கோடு அருகே தனியார் கிளப்பில் அனுமதியின்றி மது விற்பனை

நித்திரவிளை, ஜன 11: கொல்லங்கோடு அருகே ஊரம்பில் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான கிளப் செயல்படுகிறது. இந்த கிளப்பில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மதுகுடிக்க அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது வழங்கப்படுகிறது. இதை கிளப் உறுப்பினர்கள் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை கிளப் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த கிளப்பில் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் கிளப்பின் எதிர்புறம் அமைந்துள்ள ஒரு அறையின் ஜன்னலை திறந்து வைத்து மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இங்கு ஒரு குவார்ட்டர் மது ₹150க்கு விற்கப்படுவதாக தெரிகிறது. மது வாங்கியவர்கள் அறையின் எதிர்புறம் மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் சைடிஸ் உட்பட தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில், பகல் 12 மணிக்கும், கேரளாவில் காலை 10 மணிக்கும் தான் மதுக்கடைகள் திறக்கும். கேரள எல்கையை ஒட்டி ஊரம்பு பகுதி உள்ளதால் காலை வேளைகளில் ஆட்டோ, பைக் என எப்போதும் குடிமகன்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பார்கள். இந்த மது விற்பனை குறித்து பலர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்த பிறகும் மதுவிலக்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது சம்பந்தமாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: