சபரிமலைக்கு சென்றபோது சோகம் நடுக்காட்டில் யானை மிதித்து சேலம் ஐயப்ப பக்தர் பலி புதரில் வீசியதால் 2குழந்தைகள் தப்பினர்

சேலம், ஜன. 10:சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்ேபாது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். சேலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், கடந்த சில நாட்களாக தொடர்ந்து சபரிமலைக்கு புறப்பட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 7ம் தேதி இரவு சேலம் பள்ளப்பட்டியில் இருந்து 40 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர், சபரிமலைக்கு 2 வேன்களில் சென்றனர். நேற்று முன்தினம் மாலை பம்பைக்கு சென்று, அங்கிருந்து ஏழு மைல் பாதை வழியாக சபரிமலைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதில் 30பேர், பம்பை சென்று அங்கிருந்து சபரிமலைக்கு சென்றுள்ளனர். மீதியுள்ள 10 பேர் எரிமேலி காட்டுப்பகுதி வழியாக, நடந்து சபரிமலைக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களுடன், சேலம் பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த வெள்ளிப்பட்டறை தொழிலாளி பரமசிவம்(36), தனது குழந்தை மற்றும் சகோதரி குழந்தையுடன்  வனப்பகுதியில் சென்றுள்ளார்.

 நள்ளிரவில் நடுக்காட்டில் கரிமலை வழியாக நடந்து சென்ற போது, அங்கு 3 யானைகள் நிற்பதை  கண்டு அனைவரும் திடுக்கிட்டுள்ளனர். திடீரென பக்தர்களை கண்டதும் மிரண்ட யானைகள், அவர்களை துரத்தியுள்ளது. இதில்,  10 பேரும் அங்கும் இங்குமாக சிதறியோடி தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது 2குழந்தைகளையும் ேதாளில் சுமந்தவாறு தப்பியோடிய பரமசிவத்தை ஒரு யானை துரத்தியது.  இதில், நிலைதடுமாறிய அவர், எதிர்பாராத விதமாக கீழே விழந்துள்ளார். யானை அவரை நெருங்கிய, நிலையில் செய்வதறியாமல் திகைத்தவர், பரிதவித்த 2குழந்தைகளையும் அருகிலிருந்த புதருக்குள் வீசியுள்ளார். அதே ேநரத்தில் வசமாக சிக்கிக் கொண்ட பரமசிவத்தை யானை மிதித்துள்ளது. இதில் அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானர். அதைக்கண்டு உடனிருந்த பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்ததும் சபரிமலை வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானை மிதித்து பலியான பரமசிவத்தின் உடலை மீட்டு, முண்டக்கயம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு, புதருக்குள் கிடந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து காஞ்சிரங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பரமசிவத்தின் உடல், சேலத்தில் இருந்து சென்ற உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பக்தர்கள் குழுவுடன் அய்யப்பனை தரிசிக்க ெசன்ற பரமசிவம், சடலமாக கொண்டு வரப்பட்டது பள்ளப்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: