கெங்கவல்லி அருகே லாரி மோதியதில் ஊராட்சி ஊழியர் பலி; பொதுமக்கள் மறியல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கெங்கவல்லி, ஜன.10: கெங்கவல்லி அருகே லாரி மோதிய விபத்தில் ஊராட்சி ஊழியர் பலியானார். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால், தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே, இலுப்பநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் காசி(45). இவர் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை(43). இவர்களுக்கு கார்த்தி(20), கவுதம்(18), கோகுல்(16) என்ற மகன்கள் உள்ளனர். நேற்று மாலை, தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1000 பணம் வாங்குவதற்காக, இலுப்பநத்தம் பகுதியில் உள்ள ேரஷன் கடைக்கு சென்றார். சுமார் 5 மணி நேர காத்திருப்புக்கு பின், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொண்டு, தன்னுடைய வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில், தலைவாசல்-வீரகனூர் நெடுஞ்சாலையை கடந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காசி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உறவினர்கள் மற்றும்அப்பகுதி மக்கள், அவரது உடலை எடுக்க விடாமல், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், வீரகனூர் இன்ஸ்பெக்டர் சண்முகம், எஸ்ஐ ராமசாமி, வருவாய் ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய லாரியின் உரிமையாளரை வரவழைக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், தலைவாசல்-வீரகனூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட ெதாலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே, நேற்றிரவு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், தலைவாசல் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: