மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 353 பேர் கைது

நாமக்கல், ஜன.10: மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 86 பெண்கள் உள்பட 353 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, நேற்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில், நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் தனசேகரன், சிங்காரம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 30 பெண்கள் உள்பட 121 பேர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை நாமக்கல் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை முன், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். எல்பிஎப் சுந்தரமூர்த்தி, சிஐடியூ மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 76 பேரை கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

ராசிபுரம்: ராசிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடந்த மறியலுக்கு, சிஐடியூ மாவட்ட குழு ராஜகோபால் தலைமை வகித்தார். 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அசோகன் தலைமை வகித்தார். இதையடுத்து 6 பெண்கள் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிபாளையம் அடுத்த வெப்படை நான்கு சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வடக்கு ஒன்றிய செயலாளர் தனபால் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நடந்த சாலை மறியல் போட்டங்களில் கலந்துகொண்ட 86 பெண்கள் உள்பட 353 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.      

Related Stories: