அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் கருவி வழங்கல்

நாமக்கல், ஜன.10: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பயோமெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு பின், ஆசிரியர்கள் பயோமெட்ரிக் கருவியில் தங்களது கைரேகையை பதிவுசெய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி மாவட்ட அலுவலர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், வட்டார கல்வி அலுவலங்கள், வட்டார வளமையங்கள் என 364 இடங்களில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், கல்வித்துறை அலுவலர்கள், உயர் அதிகாரிகளின் வருகை பதிவேடு இனி பயோமெட்ரிக் மூலம் பராமரிக்கப்படுகிறது.

இதற்கு தேவையான பயோமெட்ரிக் கருவிகள், சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவற்றை நேற்று, நாமக்கல்லில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின் போது,  முதன்மை கல்வி அலுவலர் உஷா, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய பயிற்றுனர்களிடம் வழங்கினார்.பொங்கல் பண்டிகைக்கு பின், பயோமெட்ரிக் மூலம் ஆசிரிய, ஆசிரியைகளின் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். அரசு பள்ளிகளில் தினமும் ஆசிரிய, ஆசிரியைகள் காலை 9.15 மணிக்குள்ளும், மதியம் 1.45 மணிக்குள்ளும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும்.

ஒரு சில பள்ளிகளில் தாமதமாக வரும் ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியர் உரிய விளக்கம் கேட்டு, பின்னர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிப்பார். தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவேடு வந்துள்ளதால் ஆசிரியர்கள் இனி குறித்த நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமாகியுள்ளது. தற்போது தலைமை ஆசிரியர்களிடம் பயோமெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதை பள்ளியில் பொருத்தும் விதம் குறித்து, கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு இன்று பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் பள்ளிகளில் பொருத்தப்படும்.  பயோமெட்ரிக் வருகை பதிவேட்டை ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் இணைக்க வேண்டும். தற்போது பள்ளிகளில் உள்ள லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர்களை இதற்கு பயன்படுத்தி கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: