நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் கேட்டு பெண்கள் கைக்குழந்தைகளுடன் முற்றுகை இணை இயக்குனர் சமரசம்

நாமக்கல், ஜன.10: பிறப்பு சான்றிதழ் கேட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் கைக்குழந்தைகளுடன் பெற்றோர் முற்றுகையிட்டதால் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ், அந்தந்த மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம், கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்காக அரசு மருத்துவமனைகளில், சுகாதாரத்துறையில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், பிறந்த குழந்தைகளுக்கு கடந்த 6 மாதமாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. பெற்றோர்கள் பல முறை சென்று கேட்டும், இதுநாள் வரை பிறப்பு சான்றிதழ் பெறமுடியவில்லை. இந்நிலையில் நேற்று மாலை, 15 தாய்மார்கள், மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பிரிவை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்து அங்கு வந்த சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் உஷா, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரிடம், குழந்தை பிறந்த 2 நாளில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் மாத கணக்கில் தாமதம் செய்கிறார்கள்.

மருத்துவமனை ஊழியர்கள் பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகளை  தரக்குறைவாக பேசுகிறார்கள். பணம் கேட்டு கட்டாயப் படுத்துகின்றனர் என புகார் கூறினார்கள். இதையடுத்து இணை இயக்குனர் உஷா, அவர்களை சமாதானப்படுத்தி, பிறப்பு சான்றிதழ் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த பெண்கள், முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: