அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட வழக்கு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு

பள்ளிபாளையம், ஜன.10: பள்ளிபாளையத்தில் அரசு பஸ் டிரைவர் தாக்கப்பட்ட வழக்கில், டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுபோல், அதிகாரிகள் கொடுத்த புகாரை கொண்டு, டிரைவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு புறநகர் கிளை, பள்ளிபாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு டிரைவராக பணியாற்றி வரும் பாரதிதாசன், கடந்த 7ம் தேதி காலை பணிக்கு வந்தபோது, அவருக்கு பணி கொடுக்க மறுத்த கிளை மேலாளர் ஜெகதீசன், மேற்பார்வையாளர் தங்கவேல், ஆடிட்டர் ராமானுஜம் ஆகியோர் அடித்து உதைத்ததாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்து பாரதிதாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் கொடுத்த புகாரின் பேரில், நேற்று பள்ளிபாளையம் போலீசார் ஜெகதீசன், தங்கவேல், ராமானுஜம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜெகதீசன், தங்கவேல், ராமானுஜம் ஆகியோர், பாரதிதாசன் மீது ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் முதல்நாள் டூட்டிக்கு வந்த பாரதிதாசன், 8 மணி நேரம் மட்டுமே டூட்டி பார்க்க முடியுமென கூறி, அவர் இயக்கிய பேருந்தை கோவையில் நிறுத்தி விட்டு சென்றுவிட்டதாகவும், அடுத்த நாள் பணிக்கு வந்த அவரை, இது குறித்து கேட்ட போது தங்களை தாக்கி பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறியுள்ளனர். இருதரப்பு புகாரையும் தனித்தனி வழக்காக பதிவு செய்துள்ள பள்ளிபாளையம் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: