பொது வேலை நிறுத்தத்தையொட்டி அரசுத்துறை ஊழியர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, ஜன.10: தர்மபுரியில், பொது வேலைநிறுத்தத்தையொட்டி அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் நேற்று 2வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து அரசுத்துறை ஊழியர்கள் சங்கங்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நேற்று 2வது நாளாக நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சுருளிராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சேகர், தமிழ்செல்வி, மாதேஸ்வரன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒப்பந்த தினக்கூலி மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளை வரன்முறைப்படுத்தி, அனைத்து காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும். அனைத்து அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல், தர்மபுரி எல்ஐசி அலுவலகம் முன்பும், அரூரிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டம் நடந்தாலும், அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம் போல் நேற்று இயங்கின. தர்மபுரியில் இருந்து பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. ஒகேனக்கல்லுக்கு கர்நாடகாவில் இருந்து வரும் பஸ்கள் மட்டும் வரவில்லை. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டதால், பணபரிமாற்றம், காசோலை பரிமாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: