நகராட்சி பகுதியில் வீடுகளில் பொருத்திய 25 மோட்டார் பறிமுதல் ஆணையர் எச்சரிக்கை

தர்மபுரி, ஜன.10: தர்மபுரி நகராட்சியில் வீடுகளுக்கான இணைப்பில் விதிமீறி பொருத்தியிருந்த 25 மின்மோட்டார்களை, அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தர்மபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில், மொத்தம் 17 ஆயிரத்து 147 வீடுகள் உள்ளன. இவற்றில் 68 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். நகராட்சி சார்பில் 9 ஆயிரத்து 776 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பஞ்சப்பள்ளி அணை மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், சுழற்சிமுறையில் நகராட்சி பகுதிக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படுகிறது. ஒருநபருக்கு தினசரி 135 லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. நடப்பாண்டு, தர்மபுரி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனிடையே, வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று பாரதிபுரம், குமரபுரி காலனி பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது, 25 வீடுகளில் விதிமீறி பொருத்தியிருந்த மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தர்மபுரி நகராட்சி ஆணையர் (பொ) கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, தினசரி 78.87 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வீடுகளில் மின்மோட்டார் வைத்து குடிநீர் எடுத்தால், மோட்டார் பறிமுதல் செய்யப்படும். எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படாது. மேலும், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதமும் விதிக்கப்படும். பாரதிபுரம் பகுதியில் நடத்திய ஆய்வில், 25 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,’ என்றார்.

Related Stories: