சாலை மறியல், முற்றுகை போராட்டம்: ஆயிரம் பேர் கைது

திருப்பூர்,  ஜன.10: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நேற்று அனைத்து தொழிற் சங்கத்தினர் திருப்பூர் தலைமை தபால்  நிலையத்தை முற்றுகையிட முயன்று கைது செய்யப்படனர்.ஒப்பந்த தினக்கூலி  மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  பணிகளை வரைமுறைபடுத்தி அனைத்து காலிப்பணியிடங்களையும் சட்டபூர்வ நியமன  விதிகளின் கீழ்நிரப்பிட வேண்டும், அனைத்து வகையான ஊழியர்களுக்கும் குறைந்த  பட்சம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கிட வேண்டும், அனைத்து  ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்,  அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கிட வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளான நேற்று திருப்பூர்  ரயில்நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர்.

இந்த  முற்றுகை போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணை தலைவர் ஆறுமுகம் தலைமை  தாங்கினார். இதில், ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, எல்பிஎப்,  எம்.எல்.எப் உட்பட 12 தொழிற்சங்கங்கள் பல்வேறு தொழிற் சங்கத்தினர் கலந்து  கொண்டனர். இதுகுறித்து முன்பு தகவல் அறிந்த வடக்கு போலீசார் தபால் நிலையம்  செல்லமுடியாத அளவிற்கு பேரிகார்ட் வைத்து தடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டிருந்தது. இதனால், ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோடு உள்ளிட்ட  ரோடுகளில் வாகன போக்குவரத்து மாற்றிவிட பட்டது. இதனால், சில மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, முற்றுகை போராட்டத்தில்  ஈடுபட முயன்ற தொழில் சங்கத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்து  அருகில் உள்ள மண்டபத்தில் வைத்து பின்பு மாலையில் விடுதலை செய்தனர்.

அவிநாசி: அவிநாசி புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று  சி.ஐ.டியு. தொழிற்சங்க தலைவர் ஈசுவரன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. முத்துசாமி, ஏ.ஐ.டி..யு.சி. இசாக், எம்.அல்.எப். பாண்டியன், சத்துணவு ஊழியர் சங்கம் தனலட்சுமி, விவசாயசங்கம் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 59 பெண்கள் உள்பட 150 பேரை அவிநாசி போலீசார் நேற்று கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். தாராபுரம்: தாராபுரம் அண்ணாசிலை அருகிலிருந்து சிஐடியு மாவட்ட துணை தலைவர் கனகராஜ் தலைமையில் நேற்று கண்டன பேரணியாக சென்ற தொழிற்சங்கத்தினர் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்று தாராபுரம் புதிய திருப்பூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.தடையை மீறி மறியல் செய்ததாக கூறி 50 பெண்கள் உட்பட 105 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.மறியலலில் தொமுச மாவட்ட துணை தலைவர் அந்தோணிராஜ்,இந்தியதேசிய கிராம

தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் தனலட்சுமி, துணைதலைவர் பல்கீஷ்பேகம், செயற்குழு உறுப்பினர் செட்டியம்மாள்,தொழிலாளர் நலவாரிய அமைப்பாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உடுமலை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அனைத்து தொழிற்சங்கத்தினரும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2ம் நாளான நேற்று,உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் உள்பட 350 பேரை  போலீசார் கைது செய்தனர். மேலும் உடுமலை, மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்கள், தபால் அலுவலகம், பிஎஸ்என்எஸ் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

Related Stories: