உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 1,840 வீடுகள் ஒப்படைப்பதில் இழுபறி

கோவை, ஜன.10: கோவை உக்கடத்தில் குடிசை வாரியத்தின் 1,840 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படாததால் பொதுமக்களிடம் அதிருப்தி நிலவுகிறது.  கோவை உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் கடந்த 2008ம் ஆண்டில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ஜவகர்லால் நேரு நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் 94 கோடி ரூபாய் செலவில் 2,904 வீடுகள் கட்டும் பணி துவங்கியது. தரைதளத்துடன் சேர்த்து 4 மாடிகளில் வீடுகள் கட்டப்பட்டு வந்தது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில் கடந்த 2010ம் ஆண்டில், 24 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி பிளாக் 20 செ.மீ அளவிற்கு இரண்டாக பிளந்து விரிசல் விட்டது. மற்றொரு அடுக்குமாடி கட்டடம் 17 செ.மீ அளவிற்கு மண்ணில் புதைந்தது. கட்டடம் கட்ட மண் சோதனை நடத்தியதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், புதை மண் பூமியில் கட்டடம் கட்டியது தவறு எனவும் பல்வேறு கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

 வீடுகள் கட்டிய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விதிமுறை மீறிய அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. புதைந்த வீடுகளுக்கான இழப்பீடும் பெறப்படவில்லை. கடந்த 5 ஆண்டாக, அடுக்குமாடியின் மேல் தளத்தில் இருந்த 1064 வீடுகளை இடிக்கும் பணி நடந்தது. சுமார் 45 ஆயிரம் டன் கட்டட இடுபாடுகள், வீடுகளை சுற்றியும் மலை போல் குவிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டடங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் டன் இரும்பு கம்பிகள் பெறப்பட்டது. இது தவிர பல நூறு டன் எடையில் இரும்பு, கதவு, ஜன்னல் போன்றவை அகற்றப்பட்டது. வீடுகளில் அமைக்கப்பட்ட சிலாப்பு கற்களும் அகற்றி எடுக்கப்பட்டது. 2904 வீடுகளில் 1064 வீடுகள் இடிக்கப்பட்டது போக மீதமுள்ள 1,840 வீடுகளில் வசிக்க பயனாளிகள் தேர்வு நடந்தது.பயோ மெட்ரிக் சர்வேயில் தேர்வு பெற்ற 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டதால் அவர்களது வாரிசுகளுக்கு வீடு ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் அடுக்குமாடி வீடுகள் ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த வீடும் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. டோக்கன் பெற்றவர்கள் வீடுகளை ஒதுக்கவேண்டும் என குடிசை வாரியத்தினரையும், மாநகராட்சியினரும் வற்புறுத்தி வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகை வரை வீடு ஒதுக்கீட்டாளர்கள் குடிசை வாரியத்தினருக்கு கெடு விதித்துள்ளனர். வீடுகளை முறையாக வழங்காவிட்டால் குடியேறி விடுவோம் என எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: