மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட்கள் 250 ஆக உயரும் எம்ஐசி ஆய்வுக்குப் பின் நம்பிக்கை

மதுரை, ஜன. 10: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களை 150லிருந்து 250 ஆக உயர்த்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் முன்பு ஆய்வு செய்து, சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியது.இந்நிலையில், இந்திய மருத்துவக் கவுன்சில குழு, மதுரை அரசு மருத்துவக்கல்லூரிக்கு நேற்று வந்தது. இந்த குழுவில் ஆந்திரா திருப்பதி எஸ்வி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பிரகாஷ், கர்நாடகா மாநிலம் ஹாசன் இன்ஸ்டிடியூட் குழந்தைகள் நலத்துறை தலைவர் பிரசன்னகுமார், இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கட்லிமட்டி மற்றும் பீகார் மருத்துவ பேராசிரியர் அஜித்குமார் சௌத்ரி உள்ளிட்ட 12 பேர் இருந்தனர்.இவர்களுடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம். துணைமுதல்வர் தனலெட்சுமி, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜா, ஆர்.எம்.ஓ. லதா, ஏ.ஆர்.எம்.ஓக்கள் சுபா, காயத்ரி, அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.இந்திய மருத்துவ கவுன்சில் குழுவினர் மருத்துவக்கல்லூரி வகுப்பறைகள், ஆய்வுக்கூடங்கள், லேப்கள், கருத்தரங்கு கூடங்கள் மற்றும் மருத்துவமனையில் பழைய பிரசவ வார்டு, புதிய பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, ஆடிட்டோரியம் துறை சார்ந்த வார்டுகளிலும் ஆய்வு செய்தனர். விரிவாக்க மருத்துவமனைக்குச் சென்று சுற்றிப்பார்த்தனர். மாணவ-மாணவியர் விடுதிகள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு இரவு 8 மணி வரை நீடித்தது. இறுதியாக டீன் சண்முகசுந்தரம் தலைமையில் மருத்துவக்கல்லூரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இது குறித்து மருத்துவ பேராசிரியர்கள் கூறுகையில், `இந்திய மருத்துவக் கவுன்சில் பலமுறை ஆய்வுக்கு வந்துள்ளது. ஆனால், இவ்வளவு நேரம் இவ்வளவு இடங்களை ஆய்வு செய்தது இல்லை. இந்த முறை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரியில் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்தனர். பெரிதாக குறைகளை சுட்டிக்காட்டவில்லை. எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இப்போதே அனுமதி கொடுத்தால், வரும் கல்வி ஆண்டில் 250 மாணவர்களை சேர்க்க முடியும். ஓரிரு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அது விரைவில் சரி செய்யப்படும். வரும் 2019-20ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை 250 ஆக உயர்த்த இந்த மாத இறுதியில், அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றனர்.

Related Stories: