மத்திய அரசை கண்டித்து 2ம் நாளாக போராட்டம் ரயில் மறியலுக்கு முயன்ற 600 பேர் கைது

மதுரை, ஜன. 10: மத்திய அரசை கண்டித்து, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற தொழிற்சங்கத்தினர் 600 பேரை போலீசார் கைது செய்தனர்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று 2வது நாளாக நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டத்தில் சிஐடியூ, தொமுச, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட 20 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், மத்திய அரசு வங்கி, எல்ஐசி, அஞ்சல்துறை தொழிற்சங்கத்தினர் நேற்றைய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் வங்கிகள், மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றதால், மின்வாரிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. மதுரை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ரயில்நிலையங்கள் முன் தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கட்டபொம்மன் சிலை முன்பு திரண்டனர். தொமுச செயலாளர் அல்போன்ஸ், சிஐடியூ திருச்செல்வம், ஏஐடியுசி நந்தசிங், எச்எம்எஸ் பாதர்வெள்ளை ஆகியோர் தலைமையில் அனைவரும் ரயில் மறியல் செய்ய ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் ரயில்நிலையம் முன் தடுத்தனர். இதையடுத்து மேல வெளி வீதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக 600 பேரை போலீசார் கைது செய்தனர்.இதே போன்று திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரயில் நிலையங்களில் மறியல் செய்ய முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். எழுமலை, ஒத்தக்கடை, உசிலம்பட்டி ஆகிய இடங்களிலும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை மாவட்டத்தில் நடந்த போராட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: