திண்டுக்கல் டூ பாலகிருஷ்ணாபுரம் நேர்வழி பாதை உருவாக்க முயற்சி

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரத்தில் மேம்பாலப் பணி முடங்கியுள்ள நிலையில் பழநி ரயில்வே கேட் வழியே டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து செல்ல நேர்வழி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலப் பணி கடந்த பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் 3 ரயில்வே கேட்டுகளை கடந்து செல்வதுடன், சுற்றுப்பாதையிலும் பயணிக்க வேண்டியதுள்ளது. ஒவ்வொரு கேட்டிலும் நின்று நெரிசலில் சிக்கி செல்வதற்குள் வாகனஓட்டிகளுக்கு போதும் போதுமென்றாகிவிடுகிறது. இதுகுறித்து பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மக்களின் பிரச்னைகள், வழங்கப்படாத இழப்பீடு தொகை குறித்து அழுத்தமாக பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்தில் ‘நேர்வழி’ உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதுதொடர்பாக நேற்று ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர்அதிகாரிகள் திண்டுக்கல்லில் ஆலோசனை நடத்தினர்.இதில் பழநி ரயில்வே கேட்டில் டூவீலர் கடந்து செல்ல முடியாத அளவிற்கு மறிக்கப்பட்ட தடுப்புகளை அகற்றுவது, டூவீலர்கள் மட்டும் எளிதில் கடந்து செல்ல தண்டவாளத்திற்குள் சிலாப் கற்கள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.தன்னார்வலர்களை நியமித்து ரயில் வரும் நேரங்களில் டூவீலர்களை எச்சரித்து நிறுத்த வழிவகை செய்யலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது. சப்வேயை பொறுத்தளவில் தயார்நிலையில் இருந்தாலும் சற்று தூரம் வரை சரிவாக வந்து பின்பே சப்வேயில் வாகனங்கள் நுழைய வேண்டும். இதற்கு பல கட்டடங்களை இழப்பீடு தராமல் இடிக்க முடியாது. எனவே பொங்கலுக்கு பிறகு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சப்வே திறப்பதுதான் வாகனஓட்டிகளுக்கு தீர்வாக இருக்கும். ஆனாலும் ‘நேர்வழியில் பயணிப்பதற்கு’ தற்காலிகமாவது வழி ஏற்பட உள்ளதே என்று தாங்களே தேற்றி கொள்ளும் நிலை உருவாகி உள்ளது.

Related Stories: