தாண்டிக்குடி, பெரும்பாறை பகுதியில் கஜா சாய்க்காத மரங்கள் மீதும் ‘கை’ வனப்பகுதி பரப்பு குறையும் அபாயம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

பட்டிவீரன்பட்டி, ஜன. 10: தாண்டிக்குடி, பெரும்பாறை பகுதியில் கஜா புயலால் சாய்ந்த மரங்கள் மட்டுமின்றி நல்ல நிலையில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி சீட்டு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.கஜா புயலுக்கு பெரும்பாறை, தாண்டிக்குடி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான மரங்கள் மட்டுமின்றி பட்டா இடங்களில் இருந்த ஏராளமான மரங்களும் சாய்ந்தன. இதன் வயது சுமார் 40 முதல் 100ஐயும் தாண்டியவையாகும். இதில் பல ஜாதி மரங்கள், சில்வர், ஓக் போன்ற விலையுயர்ந்த மரங்களும் அடங்கும். பட்டா காடுகளில் சாய்ந்த மரங்களை வெட்டி விற்பனைக்கு கொண்டு செல்ல இலவச அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று தமிழக அரசும் அனுமதி வழங்கியது.இதன்படி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோர் நேரடியாக சென்று பட்டா காடுகளில் முறையான ஆய்வு செய்து உண்மையில் புயலால் சாய்ந்த மரங்களை மட்டும் கணக்கெடுத்து விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் இலவச அனுமதி சீட்டு வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அதிகாரிகள், புயலால் விழுந்த மரங்கள் மட்டுமின்றி நல்ல நிலையில் உள்ள மரங்களையும் சேர்த்து அனுமதி சீட்டு வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. தவிர அனுமதி சீட்டில் சாய்ந்த மரங்களை விட சாயாத மரங்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பட்டா காடுகளில் விழுந்த மரங்கள் 10 என்றால் 40 மரங்கள் என அனுமதி சீட்டில் உள்ளது. இதனை கண்டு ஆய்வுக்கு சென்ற வனத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து சூற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தாண்டிக்குடி, பெரும்பாறை பகுதியில் கஜா புயலால் சாயாமல் நல்ல நிலையில் உள்ள மரங்களையும் கணக்கெடுத்து வெட்ட அனுமதி வழங்கி வருகின்றனர். இதனால் பட்டா காடுகளில் மரங்களை வாங்க அதிகளவில் உள்ளூர், வெளியூர் மர வியாபாரிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஏற்கனவே வனப்பகுதியின் பரப்பளவு நாளுக்குநாள் குறைந்து மழையளவு குறைந்து வருகிறது. இந்நிலை நீடித்தால் கடுமையான வறட்சி ஏற்பட்டு பருவநிலை மாறுபாடுகள் அதிகரிக்கும். எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து நல்ல மரங்களை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்ற வேண்டும்’’ என்றனர்.

Related Stories: