மஞ்சள் ரேசன்கார்டுக்கு பொங்கல் பரிசு உண்டா?

புதுச்சேரி, ஜன. 10: உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலியால் புதுச்சேரியில் மஞ்சள் அட்டைக்கு பொங்கல் பரிசு கிடைக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலமாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பச்சரிசி, வெல்லம், பச்சைப்பயிறு, துவரம்பருப்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு பொருட்கள் கொடுப்பது வழக்கம்.கடந்த ஆண்டு மிகவும் காலதாமதமாக பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பொங்கல் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.இந்தாண்டு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்(பிபிஎல், ஏஏஒய்) சிவப்பு நிற அட்டைக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என கிரண்பேடி தெரிவித்துள்ளார். அரசாணைப்படி வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க மறுத்துள்ளார்.

இதற்கிடையே தமிழகத்தை போல அனைத்து ரேஷன் அட்டைக்கும் பொருட்கள் வழங்கும் வகையில் முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி கிரண்பேடிக்கு மீண்டும் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது.இதனை கவர்னர் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனிடையே சிவப்பு அட்டை பயனாளிகளுக்கு, இலவச அரிசிக்கான தொகை  மற்றும் பரிசுபொருட்களுக்கான பணம் ஆகிய  இரண்டையும் வங்கி கணக்கில் செலுத்த குடிமைப்பொருள் வழங்கல்துறை முடிவு செய்துள்ளது.அதன்படி சிவப்பு அட்டைதாரர்களுக்கு இரண்டு மாதத்துக்கான அரிசி பணம் ரூ.600 மற்றும் பொங்கல் பரிசு பொருட்கள் தொகை ரூ.135 சேர்த்து ரூ.735 வங்கி கணக்கில் விரைவில் செலுத்தப்படவுள்ளது.இதற்கிடையே தமிழகத்தில் அனைவருக்கும் ரூ.1000 வழங்குவதற்கு  சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மட்டுமே பணம் கொடுக்கலாம் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் பொங்கல் பரிசுபொருட்கள் வழங்க தடைவிதிக்கப்படவில்லை. புதுவையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்குதான் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என கவர்னர் கிரண்பேடி ஏற்கனவே கூறிவந்தார். இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு  மஞ்சள் அட்டைக்கு பொங்கல் பரிசு  கிடைப்பதில் மேலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: