பிறப்பு, இறப்பு சான்றுக்கு லஞ்சம் கேட்டதாக புகார் அரசு மருத்துவமனையில் விஜிலன்ஸ் அதிரடியில் ₹8 ஆயிரம் சிக்கியது திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஜன.10: திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ேசாதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ₹8 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்ேதாறும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் பிரசவ வார்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு ₹ஆயிரமும், பெண் குழந்தைகளுக்கு ₹500ம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ₹20க்கு பதில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சான்றிதழ்கள் தருவதற்கு ₹100 முதல் ₹200 வரை பொதுமக்களிடம் இருந்து கட்டாயமாக வசூல் செய்வதாக திருவண்ணாமலை விஜிலன்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லஞ்சஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சரவணக்குமார் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருண்பிரசாத், ரஜினிகாந்த், துணை ஆய்வுக்குழு அலுவலர் ேஜாதி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ₹8 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். நேற்று பகல் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சோதனை நடந்தது. அரசு மருத்துவமனையில் நடந்த இந்த திடீர் சோதனை மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: