ஐகோர்ட் கிளையில் வக்கீல் அறைகளுக்கான கூடுதல் கட்டிடம் கட்ட வழக்கு

மதுரை, ஜன. 9: ஐகோர்ட் கிளையில் வக்கீல் அறைகளுக்கான கூடுதல் கட்டிடம் கட்டக் கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வக்கீல் ஆனந்தமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தென்மாவட்ட மக்களின் நலன் கருதி ஐகோர்ட் மதுரை கிளை கடந்த 2004ல் துவக்கப்பட்டது. வக்கீல்களுக்கான அறை சீனியாரிட்டி அடிப்படையில் ஒதுக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், வழக்குகளும் குறைவாகவே தாக்கல் செய்யப்பட்டன. தற்போது அதிக வழக்குகள் தாக்கல் ஆவதால் நீதிபதிகளின் எண்ணிக்கையும்  உயர்த்தப்பட்டுள்ளது. ஐகோர்ட் கிளையில் ரிட் மனுக்கள் கடந்தாண்டு மட்டும் சுமார் 25 ஆயிரம் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதிகளவு வக்கீல்களும், வழக்காடிகளும் ஐகோர்ட்டை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், துவக்கத்தின் போது இருந்த வக்கீல்களுக்கான அறைகளே இன்றும் உள்ளன.

இதனால், ஏராளமான வக்கீல்கள் அறைகளின்றி நீதிமன்ற வளாகம் மற்றும் வெளிப்பகுதியில் இருந்தே பணியாற்றும் நிலை உள்ளது.

இதனால், வழக்காடிகளை முறையாக சந்தித்து பேச முடியாத நிலையும், வழக்குகளை தயார்படுத்துவதிலும் பணிகள் பாதிக்கின்றன. எனவே, ஐகோர்ட் கிளையில் பணியாற்றும் வக்கீல்களுக்கு கூடுதல் அறைகள் கட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகிேயார் மனு குறித்து சட்டத் துறை மற்றும் பொதுப்பணித்துறை செயலர்கள், ஐகோர்ட் கிளை பதிவாளர்கள், ஐகோர்ட் கிளை வக்கீல் சங்கங்களின் செயலர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜன.31க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: