ஓமலூர் அருகே 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப்பணி

ஓமலூர், ஜன.9: ஓமலூர் அருகே மேம்பாலப்பணி மந்தகதியில் நடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெரமச்சூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக ஓமலூரில் இருந்து முத்துநாயக்கன்பட்டி, பாகல்பட்டி, பழையூர், சேலம் ரயில் நிலையம், இரும்பாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மாநில அரசின் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே சேலம்-பெங்களூர் செல்லும் ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நிறைந்து காணப்படும் நிலையில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதையடுத்து ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு மேம்பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பின் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அங்கு பாலம் கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டன. ரயில்வே நிர்வாகம் கேட் பகுதியில் மட்டும் பாலத்தை அமைத்த நிலையில், மாநில அரசு மேம்பாலம் கட்டுவதற்கான பணியை தொடங்காமல் உள்ளது. 2 ஆண்டுகளாகியும் பணிகள் நடக்காததால் ரயில்வே கேட் பகுதியில் மட்டும் பாலம் அந்தரத்தில் தொங்குவது போல் நிற்கிறது. அந்த வழியாக நிரந்தரமாக போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே கேட் பகுதியில் மண் கொட்டபட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகிறது.  பாலம் கட்டப்பட்ட நிலையிலும் ரயில்வே கேட்டை கீப்பர் மூடுவதும், திறப்பதுமாக தன்னுடைய பணியை செய்து வருகிறார்.

மேலும், பலரும் தற்காலிகமாக அதே பகுதியில் உள்ள தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே மேம்பாலம் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளான நிலையிலும், மாநில அரசால் மேம்பாலம் அமைத்து, சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் மேம்பாலப் பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: