தம்மம்பட்டி பகுதியில் நலிவடைந்து வரும் சுண்ணாம்புக்கல் தொழில்

தம்மம்பட்டி, ஜன.9: வண்ண, வண்ண பெயிண்டுகள் வரவால், சுண்ணாம்புக்கல் தொழில் முற்றிலும் பாதிப்படைந்து விட்டது. இதனால் அதையே நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழிலில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுண்ணாம்புக்கல், தம்மம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியான கோனேரிபட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், செந்தாரப்பட்டி, கொண்டேயம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு விற்பனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. தம்மம்பட்டி சுண்ணாம்புக்கல் வேண்டுமென்று பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் விரும்பி வாங்கி செல்வர்.

தற்போதைய சூழலில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சூளையில் சுண்ணாம்புக்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது.ஒரு மூட்டை சுண்ணாம்புக்கல் 150 ரூபாய்க்கும், சில்லரை விலையில் ஒரு படி சுண்ணாம்புக்கல் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை, தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் வாங்கிச் செல்கிறார்கள். நவீன உலகில் பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் நிறுவனங்களுக்கு வெள்ளையடிப்பதற்காக சுண்ணாம்புக்கல்லுக்கு பதிலாக தற்போது வண்ண வண்ண பெயிண்ட், பவுடர்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சுண்ணாம்புக்கல்லின் பயன்பாடு குறைந்து போயுள்ளது. போதிய வருமானம் இல்லாததால் சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விட்டதாக அதை நம்பிய தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

 இது குறித்து சுண்ணாம்புக்கல் தயாரிப்பு தொழிலாளி வள்ளி கூறும்போது; சுண்ணாம்புக்கல் தயாரிக்கும் தொழிலை குலத்தொழிலாக செய்து வருகிறோம். தற்போது மக்கள் பவுடரை அதிகளவில் பயன்படுத்துவதால் சுண்ணாம்புக்கல் விற்பனை குறைந்து விட்டது. 50க்கும் மேற்பட்ட சுண்ணாம்பு சூளைகள் இயங்கிய நிலையில் தற்போது குறைவான சூளைகளே இயங்கி வருகிறது. இத்தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்கள் வேலையிழந்து மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர், எனவே தமிழக அரசு தொழிலாளர்களின் நலன் கருதி காலத்திற்கேற்றவாறு சுண்ணாம்பு பவுடரை தயாரிக்கும் இயந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். இல்லையெனில் தொழிலாளர்களிடமிருந்து சுண்ணாம்புக்கல்லை கொள்முதல் செய்து அதை பவுடராக்கி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: