ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தை குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகை

ஆத்தூர், ஜன.9: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 10வது வார்டு பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு நகராட்சியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தெருவில் உள்ள 30 வீட்டு குழாய்களில் மட்டும் குடிநீர் வராமல் உள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வார்டு பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் தங்கள் தெருவில் உள்ள பாதி வீடுகளுக்கும் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், தங்களுடைய வீடுகளுக்கு மட்டும் குடிநீர் வருவதில்லை என கூறி நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர்கள் முருகேசன், அன்புநிதி ஆகியோர் தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் அந்த தெரு பகுதிக்கு விநியோகம் செய்யப்படும் பைப் லைனை பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

Related Stories: