ஆன்லைன் வணிகத்தை எதிர்த்து மருந்து விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், ஜன.9: ஆன்லைன் மருந்து வணிகத்தை எதிர்த்து, ஆத்தூரில் மருந்து விற்பனையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை கடைவீதி தபால் அலுவலகம் முன் ஆத்தூர்,  கெங்கவல்லி தாலுகா மருந்து வணிகர் சங்கம் சார்பில், ஆன்லைன் மருந்து வணிகத்தை தடை செய்யக்கோரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆத்தூர் தாலுகா தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். கெங்கவல்லி தாலுகா தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மூத்த நிர்வாகிகள் ஜெயராமன், சீனிவாசன், செந்தில்குமார், வெங்கடேசன், கண்ணன் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் ஆத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற மருந்து விற்பனையாளர்கள், கோரிக்கையை அடங்கிய மனுவை தாசில்தார் செல்வனிடம் அளித்தனர்.

வாழப்பாடி:   வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே  ஆன்லைன் மருந்து விற்பனையை எதிர்த்து வாழப்பாடி மற்றும்  பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  வாழப்பாடி வட்டார தலைவர் செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் வெற்றிச்செல்வன்,  நிர்வாகிகள் நியாஸ், சித்திக்அலி, முருகன், மணி, பெத்தநாயக்கன்பாளையம் தலைவர்  கமால்பாட்ஷா உள்ளிட்ட 80க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு ஆன்லைன் மருந்து வர்த்தகத்தை தடுத்து நிறுத்தாவிட்டால், இந்தியாவிலுள்ள 8 லட்சம் மருந்து வணிகர்களும்,  தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் மருந்து வணிகர்களும் ஒன்று திரண்டு  காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என சங்க நிர்வாகிகள்  எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: