சென்னை வாலிபர் கொலை வழக்கு : 5 பேரை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

திருவண்ணாமலை, ஜன.8: சென்னை வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சரணடைந்த பெண் உட்பட 5 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை கோர்ட் அனுமதி வழங்கியது.சென்னையைச் சேர்ந்த நாகராஜ்(27) என்பவர், திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவில் கடந்த மாதம் 29ம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா(37), சூளைமேடு ரூபலட்சுமணன் மகன் தினேஷ்குமார்(20), அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சாம்சுந்தர்(24), மேளாகன் மகன் சந்தோஷ்குமார்(23), அசோக்நகர் தண்டபாணி மகன் சரவணன்(25) ஆகியோர் கடந்த 31ம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும், சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், மஞ்சுளாவின் 9வயது மகனை கடத்தி செய்ததால், பழிக்கு பழிவாங்க நாகராஜ் கொலை நடந்தது தெரியவந்தது. எனவே, இந்த கொலைக்கான முழுமையான பின்னணியை விசாரிக்க ேபாலீஸ் முடிவு செய்தனர்.இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதையொட்டி, மஞ்சுளா உள்ளிட்ட 5 பேரையும், பலத்த பாதுகாப்புடன் அழைத்து உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர்.போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விக்னேஷ் பிரபு, கொலை வழக்கு விசாரணைக்காக மஞ்சுளா உட்பட 5 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதித்தார். உரிய விசாரணை முடிந்ததும், வரும் 11ம் தேதி மீண்டும் கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: