அண்ணாமலையார் கோயில் தங்கத்தேர் சீரமைப்பு பணி தொடக்கம் : ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டம்

திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 2015ம் ஆண்டு முதல் பவனிக்கு பயன்படுத்தாமல் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேர், ₹3.50 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுவாமி பவனி வருவதற்காக மரத் தேர் எனப்படும் மகா ரதம், வெள்ளித்தேர், தங்கத்தேர் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. தீபத்திருவிழாவில், மரத்தேர், வெள்ளித் தேர் பயன்படுத்தப்படும்.

ஆனால், தங்கத் தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் விரும்பும் நாட்களில் நேர்த்திக்கடனாக இழுத்துச் செல்லும் சிறப்புக்குரியது. மகா ரதம் மிகவும் பழமையானது. வெள்ளித்தேர் கடந்த 1907ம் ஆண்டு உருவானது.பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையின் பயனாக, ₹87 லட்சம் மதிப்பில் கடந்த 2006ம் ஆண்டு உருவானது தங்கத்தேர். அதன் உயரம் 16 அடியாகும். கடந்த 16.3.2006 அன்று, தங்கத்தேர் முதல் வெள்ளொட்டம் விடப்பட்டது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, தங்கத் தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும் மீண்டும் தங்கத் தேர் பவனி வரும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. எனவே, தங்கத் தேரில் மீண்டும் சுவாமி வீதிஉலா வரும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர் நிலை நிறுத்தியிருந்தால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது. அதனால், தங்க தேரை பவனிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், தங்கத் தேரை முழுமையாக சீரமைத்து (மராமத்து பணி) பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்ைல. எனவே, பக்தரகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

சீரமைப்பு பணிக்கான உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அறநிலையத்துறையின் ஒப்புதலுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அனுப்பினர். அதன்பிறகும், பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில், உபயதாரர்களின் காணிக்கை மூலம் தற்போது ₹3.50 லட்சம் மதிப்பில் தங்கத் தேர் சீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதையொட்டி, தங்கத் தேர் சீரமைப்பு பணியை, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:தங்கத் தேர் தொடர்ந்து ஒரே இடத்தில் நிறுத்தியிருந்ததால், தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள், தூண்கள் லேசாக சேதடைந்துள்ளன. எனவே, தங்க தகடுகளை அகற்றி, மரத்தூண்கள், பலகைகளின் உறுதித்தன்மை குறித்து மர சிற்பிகள் பரிசோதித்து, மராமத்து பணியை மேற்கொள்ள உள்ளனர்.

உபயதாரர்கள் வழங்கிய நிதி மூலம் இப்பணிகள் நடைபெறும். உத்தேசமாக ₹3.50 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளை, ஒரு மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.

Related Stories: