நெல்லையில் நோய் தடுப்பு ஆராய்ச்சிகள் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் தகவல்

நெல்லை, டிச. 11: நெல்லையில் நடந்து வரும் நோய் தடுப்பு ஆராய்ச்சிகள், எதிர்காலத்தில் மருத்துவ துறைக்கு பெரிதும் உதவும் என்று அறிவியல் மையத்தில் நடந்த நோபல் பரிசு பெற்ற சாதனையாளர்கள் கேலரி திறப்பு விழாவில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கண்ணன் பேசினார்.நெல்லை அறிவியல் மையத்தில் நோபல் பரிசு ெபற்ற சாதனையாளர்களின் கேலரி புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு பெறுபவர்கள் படம். அவர்களது ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், சாதனைகள் மற்றும் விபரங்கள் துறைவாரியாக இடம்பெற்றிருக்கும். இதன் திறப்புவிழா நடந்தது. இதனை நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் கண்ணன் திறந்து வைத்து பேசியதாவது:நோபல் பரிசு பெறும் சாதனையாளர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், மருத்துவத்துறைக்கு பெரிதும் பயன்பட்டுவருகிறது. குறிப்பாக எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் போன்றவை இன்றைய மருத்துவத்துறையின் சேவைக்கு பெரிதும் உதவுகிறது. கேன்சர் நோயை குணப்படுத்த நடக்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் எதிர்காலத்தில் மிகுந்த பலனை தரும் என்ற நம்பிக்கை மருத்துவ உலகில் உள்ளது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியும் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. மத்திய அரசின் சுகாதார ஆராய்ச்சி துறை (டிஎச்ஆர்) சார்பில் நெல்லை அருகே உள்ள கல்லூரில் மாதிரி ஊரக சுகாதார ஆராய்ச்சி பிரிவை (எம்ஆர்ஹெச்ஆர்யு) அமைத்து கொடுத்துள்ளனர். இது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படுகிறது. இங்கு கடந்த 2014-15ம் ஆண்டில் இருந்து மருத்துவம் சார்ந்த ஊரக நோய் தொடர்பான ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதில் கிடைக்கும் பலன்களும் எதிர்கால மருத்துவ சேவைக்கு பயனுள்ளதாக அமையும், என்றார்.முன்னதாக அறிவியல் மைய அலுவலர் எம் குமார் தலைமை வகித்து பேசினார். அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் வரவேற்றார். நிகழ்ச்சியில் முனைஞ்சிப்பட்டி டயட் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: