சிவன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

விழுப்புரம், டிச. 11: ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்கக்கோரி இளைஞர்கள் மண்டியிட்டு வந்து ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மற்றும் இளைஞர்கள் ஆட்சியரிடம் நூதன முறையில் மண்டியிட்டுக்கொண்டே வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சேந்தமங்கலத்தை தலைநகரமாக கொண்டு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்து வந்த கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் என்ற மன்னரால் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில் மத்திய தொல்லியல்துறை மூலம் ஆய்வு செய்து புனரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கியும் இதுவரை சீரமைப்பு பணிகள் செய்யாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. மேலும் கோயிலுக்கு  சொந்தமான 40 ஏக்கருக்கும் மேல் நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் கோயில் நிர்வாகத்திற்கு வரக்கூடிய வருமானங்கள் கிடைக்காமல் பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உலகப்புகழ்பெற்ற சிவன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி விரைவில் புனரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: