ஜவுளி கடையை உடைத்து துணிகர கொள்ளை

புதுச்சேரி, டிச. 11: புதுவையில் ஜவுளிக் கடையை உடைத்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கேரள ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

  புதுவை, திருமுடி நகர், முதலாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர்  கோவிந்தராஜ் மகன் இளவரசன் (28). காந்திவீதி- சின்னவாய்க்கால் வீதி  சந்திப்பு அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில்  பெரியவர்களுக்கான துணிமணிகள் மட்டுமின்றி கூலிங்கிளாஸ் கண்ணாடிகள்,  தொப்பிகள் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த  8ம்தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு 10.30 மணியளவில் இளவரசன் கடையை  பூட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் மறுநாள் கடையை திறந்த அவர்  மேற்கூரையின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு  அதிர்ச்சி யடைந்தார். அங்கிருந்த ஆடவருக்கான துணிமணிகள் மற்றும் பொருட்கள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு

இருந்தது.

 யாரோ மர்ம ஆசாமிகள்  நள்ளிரவு மேற்கூரையின் கண்ணாடி கதவை உடைத்து உள்ளே இறங்கி துணிகர  கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் இளவரசன்  முறையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலான போலீசார்  வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று மாலை புதுச்சேரி  ரயில் நிலையத்தில் கையில் பெரிய பிளாஸ்டிக் பையில் துணிமணிகளுடன் 2 வாலிபர்  சந்தேகத்துக்கிடமான வகையில் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அங்கு விரைந்த ஒதியஞ்சாலை போலீசார், இருவரிடமும் விசாரணை  நடத்தினர்.

 அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்கூறவே, அந்த பையை  கைப்பற்றி இருவரையும் காவல் நிலையம் கொண்டு அதிரடி விசாரணையில் இறங்கினர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் கொச்சின், எர்ணாகுளத்தைச் சேர்ந்த  சேவியர் அஜய் (24), பெஞ்சமின் ஜோசப் (19) என்பதும், புதுவையில் நண்பரை  பார்க்க வந்துவிட்டு கடை வீதிக்கு துணிகள் வாங்க சென்றதாகவும், அப்போது  இளவரசன் கடையின் மேற்கூரை கண்ணாடியில் இருப்பதை நோட்டமிட்ட தாங்கள் அன்றைய  தினம் இரவு அதை உடைத்து பொருட்கள் மற்றும் ரூ.1,500 ரொக்கத்தை திருடிக்  கொண்டு சொந்தஊர் திரும்ப ரயில் நிலையத்தில் காத்திருந்ததாகவும்  தெரிவித்தனர்.இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட  துணிமணிகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: