சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் மறியல்

காட்டுமன்னார்கோவில், டிச. 11:  காட்டுமன்னார்கோவில் அடுத்த தவர்த்தாம்பட்டில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். குமராட்சி அருகே கடந்த ஆண்டு கோப்பாடியில் உள்ள பழைய கொள்ளிடம் வடிகாலை தூர்வாரும் பணி நடந்தது. பொதுப்பணித்துறை சார்பில் வடிகால் கரையை சமன்படுத்தும்போது அதிலிருந்த வண்டல்கள் அருகே உள்ள பெரியதெரு சாலையில் கொட்டப்பட்டது. தற்போது பருவமழை பெய்துவருவதால் இந்த சாலையில் உள்ள வண்டல்மண் கரைந்து சேறும் சகதியுமாக சதுப்புநிலம் போல் காட்சியளிக்கிறது. இதனால் தவர்த்தாம்பட்டு கிராம பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் தெருவிளக்கும் இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் வழுக்கிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

கடந்த மாதம் அப்பகுதியை சார்ந்த ஷீலாராணி என்ற இளம்பெண் சேற்றில் வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோப்பாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டு சாலையை சீரமைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையின் போது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தவர்த்தாம்பட்டு பெரிய காலனிதெரு, சின்ன காலனிதெரு மற்றும் புதுத்தெருவில் வசிக்கும் சுமார் 300 குடும்பங்களை சார்ந்த பெண்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் திருச்சி- சிதம்பரம் சாலையில் நேற்று திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குமராட்சி காவல் ஆய்வாளர் வெற்றிவேல் மற்றும் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து நடந்ததால் சாலையின் இருபுறமும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் காத்துநின்றன. அதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 25 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: