சுகாதார குறைவான தொழில் செய்வோருக்கான தேசிய ஆணைய உறுப்பினர் நாளை நாமக்கல் வருகை

நாமக்கல், டிச.11: நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில், சுகாதார குறைவான தொழில் செய்பவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, சுகாதார குறைவான தொழில் செய்வோருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஜெகதீஸ் ஹிமானி நாளை (12ம் தேதி) நாமக்கல் வருகிறார். காலை 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார்.

துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய முறை, சுகாதாரமான வாழ்கை, சொந்தமாக வீடு அமைத்து தருதல், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதை உறுதிசெய்தல் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான கடனுதவிகள், பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உதவிகள், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விபத்து காப்பீடு திட்டம் நல வாரியத்தின் மூலம் நலத்திட்டங்கள் வழங்குதல், துப்புரவு பணியாளர்கள் கணக்கெடுப்பு குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பின்னர், நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மதியம் 2 மணிக்கு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து துப்புரவு தொழிலாளர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் துப்புரவு தொழில் செய்யும் பணியாளர்களுக்கான பிரதிநிதிகளுடன், மாலை 3.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.

 

Related Stories: