அதிகாரிகளின் அலட்சியத்தால் துணை மின் நிலையத்தை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

ராமநாதபுரம், டிச.11: மண்டபம் துணைமின் நிலையத்தை சுத்தப்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அங்கு வேலைபார்க்கும் மின்வாரிய ஊழியர்களுக்காக மின்வாரிய அலுவலகத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டன. தற்போது அந்த குடியிருப்பு வீடுகளில் மின்வாரிய ஊழியர்கள் இல்லாமல் பராமரிப்பின்றி உடைந்த நிலையில் உள்ளது. இதுதவிர கடந்த பல வருடங்களாக துணை மின் நிலையத்திற்கு சொந்தமான இடம் சுத்தப்படுத்தப்படாததால் அப்பகுதியை சுற்றிலும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. துணைமின் நிலையத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த முள்வேலியும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் துணை மின் நிலையத்திற்கு சொந்தமான அப்பகுதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மாலை நேரங்களில் அந்த பகுதிகளில் உள்ள கருவேல மரங்களை முறையான அனுமதி பெறாமல் பலர் வெட்டி வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மண்டபம் துணைமின் நிலையத்திற்கு அருகில் ஹெலிபேட் தளம், பஸ் ஸ்டாப், கடைவீதி மற்றும் இலங்கை அகதிகள் முகாம் போன்ற முக்கிய இடங்கள் உள்ளன. பாதுகாப்பு நலன் கருதி விரைவில் சம்மந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த கருவேல மரங்களை வெட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்டபம் முகாமை சேர்ந்த சசிக்குமார் கூறுகையில், பலமுறை இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஏற்கனவே பெய்த மழையால் தற்போது மழைநீரும் அப்பகுதியில் நிறைந்துள்ளது. அதனால் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷத்தன்மையுள்ள பூச்சிகள் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ஆயிரம் மதிப்புள்ள மரங்களை முறையான அனுமதியின்றி அவ்வப்போது பலர் வெட்டி வருகின்றனர். அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்றார். மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய அலுவலகம் தான் முடிவு செய்ய வேண்டும். நாங்கள் ஏற்கனவே இதுபற்றிய தகவல்களை அவர்களிடம் தெரிவித்துள்ளோம் என்றனர்.

Related Stories: