மாவட்டம் பேட்ஜ் முறையை அகற்றி அனைவருக்கும் மாடுபிடிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும்

மதுரை, டிச. 11: ஜல்லிக்கட்டில் பேட்ஜ் முறையை அகற்றி அனைவரும் களத்தில் இறங்கி மாடுபிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜல்லிக்கட்டு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் மாவட்ட செயலாளர் வினோத் நேற்று கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு, மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. இப்போட்டியில் பேட்ஜ் முறையில், வீரர்கள் மாடுபிடிக்க களம் இறக்கப்படுகின்றனர். இதனால் ஒரு வீரர் ஒவ்வொரு பேட்ஜிலும் கட்டாயம் மாடுபிடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் எல்லா மாடுகளையும் பிடிப்பதால், வீரருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே பேட்ஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து வீரர்களையும் களத்தில் இறக்கிவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் நலச்சங்க தலைவர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் நடராஜனிடம் மனு கொடுத்தனர். அதில், 6வது ஊதியக்குழுவினால் மாற்றியமைக்கப்பட்ட ஓய்வூதியத்தை பல வயோதிக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கருவூலத்திற்கு அலைந்து பெற முடியாத நிலையில் உள்ளனர். எனவே விண்ணப்பதாரர்களின் ஓய்வூதிய கொடுப்பாணை எண், வங்கி, வங்கிக்கணக்கு எண் ஆகியவை, அவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்திலேயே இருப்பதால், அதனை வைத்து, கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் ஓய்வு பெற்ற வயோதிக கல்லூரி பேராசிரியர்களின் சிரமத்தை கலைய வேண்டும் என கூறியுள்ளனர்.

Related Stories: