ஆம்புலன்ஸ், குடிநீர் அடிப்படை வசதிகள் தேவை முதலுதவி வசதி கூட இல்லாத மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறநிலையத்துறை புதிய கமிஷனர் கவனிப்பாரா?

மதுரை, டிச. 11: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிக்கான முதலுதவி இல்லாத நிலை ெதாடர்கிறது. இந்து அறநிலையத்துறையின் புதிய கமிஷனராக பதவியேற்றுள்ள டி.கே.ராமச்சந்திரன் இப்பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதில் ஏராளமான முதியவர்களும், சிறுகுழந்தைகளும் வருகின்றனர். திடீரென முதியவருக்கு நெஞ்சுவலியோ, குழந்தைகளுக்கு ஏதாவது உடல்பிரச்னையோ வந்தால் முதலுதவி செய்ய மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எந்த வசதியும் இல்லை. குறிப்பாக, ஆம்புலன்ஸ் வசதி கூட கிடையாது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் குறைவானவர்கள் மயங்கி விழுந்தால், 108 ஆம்புலன்சை வரவழைக்கும் நிலை உள்ளது. அந்த ஆம்புலன்ஸ் கோயிலுக்கு வரும் வரை 30 மணி நேரமாக பாதிக்கப்பட்டவர், காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது. கோயில் நிர்வாகத்திற்கென நிரந்தமாக ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்களின் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையின் வாகனம் இங்கு நிரந்தமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்து கூறுகையில், ‘‘ கடந்த பிப்.2ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டு கடைகள் மற்றும் மண்டபம் சேதமடைந்தது. இந்த விபத்து நடந்து 10 மாதங்களாகியும் புதுப்பிக்கும் பணிகள் சிறுதளவு கூட நடக்கவில்லை. இதனால் பக்தர்கள் முழுமையாக தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீர் இல்லை. பக்தர்களுக்கு ஓய்வு அறைகளோ, சித்திரை வீதிகளில் நிழற்குடைகளோ, கோயிலைச் சுற்றி உள்ள பகுதியில் முழுமையான மின்சார விளக்குகளோ இல்லை. சுற்றுப்பகுதி இருட்டு பகுதியாக காட்சியளிக்கிறது. பக்தர்களிடம் தரிசனம் துவங்கி அனைத்திற்கும் கட்டணம் வசூல் நடத்தப்படுகிறது. இதேபோல், எல்லீஸ் நகரில் கோயில் பார்க்கிங் கட்டணம் குறைக்க வேண்டும். செல்போன் பாதுகாப்பு கட்டணத்தை கைவிட பரிசீலிக்க வேண்டும். போலீஸ் கெடுபிடியில் இருந்து பக்தர்கள் சுதந்திரமாக கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வரவேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். கோயில் ஊழியர்கள் சங்கத்தினர் கூறுகையில் ‘‘ கோயிலில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ஏற்படும் பணிசுமையால், மனஉளைச்சல் ஏற்படுகிறது. எனவே, தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்’’ என்றனர். இந்து அறநிலைத்துறையின் புதிய கமிஷனரான டி.கே. ராமச்சந்திரன் பொறுப்பு ஏற்ற பிறகு, முதன் முறையாக இன்று(டிச.11) மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறார். அவர் இப்பிரச்னைகளை கவனிக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: