கோவை ரயில் நிலையத்தில் 20 ஆண்டாக செயல்பட்ட 4 ஆவின் பாலகம் மூடல்

கோவை, டிச.11: கோவை ரயில் நிலையத்தில் கடந்த 20 ஆண்டாக செயல்பட்டு  வந்த 4 ஆவின் பாலகங்களுக்கு விற்பனை உரிமம் வழங்காததால் மூடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக கேரள அரசின் ‘மில்மா’ பால் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1,2 மற்றும் 3,4 ஆகியவற்றில் தலா ஒரு ஆவின் பாலகம் இயங்கி வந்தது.இக்கடைக்கான உரிமம் 3 ஆண்டுக்கு ஒரு முறை தென்னக ரயில்வே மூலம் ஆவின் நிர்வாகத்திற்கு டெண்டர் மூலம் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், கடந்த நவம்பர் 15ம் தேதியுடன் இதற்கான விற்பனை உரிமம் முடிந்தது. முன் கூட்டியே தென்னக ரயில்வே மறு டெண்டர் அறிவித்து, அடுத்த 3 ஆண்டிற்கான உரிமத்திற்கு ஒப்பந்தபுள்ளி கோரியது. இதில் அரசின் நேரடி தயாரிப்பில் உள்ள பால் உற்பத்தி நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி இதில் தமிழகத்தின் ஆவின், கேரளாவின் மில்மா, வட இந்தியாவின் கெவின் ஆகிய பால் உற்பத்தி நிறுவனங்கள் 4 கடைகளுக்கும் ஒப்பந்தபுள்ளி அளித்தன. இதில் அதிகபட்ச விலையை கேரள அரசின் மில்மா பால் நிறுவனத்தின் விற்பனையாளர் அளித்ததால், அந்த நிறுவனத்திற்கு 4 கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து, ஆவின் பாலகங்கள் மூடப்பட்டுள்ளன.  இது குறித்து ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

தென்னக ரயில்வே, லாப நோக்கம் பார்க்காமல், குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையை நிர்ணயித்து மீண்டும் தமிழகத்தின் ஆவின் நிர்வாகத்திற்கே வழங்க வேண்டும். ஆவின் பாலகம் மூடப்பட்டதால், அதில் பணியாற்றி வந்த 20க்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் 4 ஆவின் பாலகத்திலும் தினசரி தலா ரூ.10 ஆயிரத்திற்கு குறையாமல் விற்பனை நடக்கும். இதனால் மாதத்திற்கு ரூ.12 லட்சம் வீதம் ஆவின் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில்  மீண்டும் ஆவின் பாலகத்திற்கு உரிமம் வழங்கவும், பயணிகளின் விருப்பத்தை நிறைவேற்றவும் சேலம் கோட்டம் மற்றும் தென்னகர ரயில்வே முன்வர வேண்டும். இவ்வாறு ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறினர்.

Related Stories: