இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கிற்கு 31வது கூட்டத்திலாவது 18% வரி குறைப்பு நிறைவேறுமா?

கோவை, டிச.11: இன்ஜினியரிங் தொழில்துறையில் மேற்கொள்ளப்படும் ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டியில் விதிக்கப்பட்ட 18 சதவீதம் குறைக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக நடந்த 30 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் நிறைவேறாமல் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள 31வது கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும், என்று காட்மா குறுந்தொழில் அமைப்பு எதிர்பார்க்கிறது. இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்  முனைவோர் சங்கம் (காட்மா) இணை தலைவர் மகேஸ்வரன், பொது செயலாளர் சிவக்குமார்  ஆகியோர் கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளது. இதில் 3.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். குறுந்தொழிற்கூடங்களில் ரயில்வே, ராணுவம் உள்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் உள்பட பொறியியல் இன்ஜினியரிங் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்கள் ஜாப் ஒர்க் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூலையில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் குறுந்தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஜாப் ஒர்க்கிற்கு 18 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு 5 சதவீத வாட் வரி மட்டும் இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரி உயர்வால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குறுந்தொழிற்கூடங்களுக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக ஜாப் ஒர்க் 40 சதவீதம் சதவீதம் வரை குறைந்தது. இதனால் குறுந்தொழிற்கூடங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இதை தவிர்க்க ஜாப்ஒர்க்கிற்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும், என்று தமிழக முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து கடந்த ஒரு ஆண்டாக முறையிட்டு வருகிறோம். ஜிஎஸ்டி வரி விதிப்பை பரிசீலிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் 30 முறை நடந்துள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று தமிழக தொழிற்துறையினரின் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார். ஒவ்வொரு கூட்டத்திலும் குறுந்தொழில் முனைவோரின் கோரிக்கைகள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறோம். இதுவரை ஏமாற்றமே ஏற்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சலின் 31வது ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி டெல்லியில் அனைத்து மாநில நிதியமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளது. இதில் சில பொருட்கள் மற்றும் சேவைக்கான வரியை குைறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், ரூ.20 லட்சம் வரையிலான ஜாப் ஒர்க் வர்த்தகத்திற்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். அதற்கு மேல் உற்பத்தி செய்யப்படும் ஜாப் ஒர்க் மீதான 18 சதவீத வரிவிதிப்பை 5 சதவீதமாக நிர்ணயித்து அறிவிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு காட்மா இணை தலைவர் மகேஸ்வரன், பொது செயலாளர் சிவக்குமார்  ஆகியோர் கூறினர்.

Related Stories: