தமிழகம் முழுவதும் 700 உழவர் சந்தை திறக்க வேண்டும்

ஈரோடு, டிச. 11:   கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  விவசாயிகள் விளைவித்த பொருட்களை மக்களிடத்தில் நேரடியாக விற்பனை செய்ய தமிழக அரசின் சார்பில் உழவர்சந்தை துவங்கப்பட்டது. உழவர்சந்தைகள் துவங்கிய போது விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அன்றாடம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நஷ்டமில்லாமல் விற்பனை செய்தனர். விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு உற்பத்தி விலையை விட குறைவான விலையை நிர்ணயம் செய்து இடைத்தரகர்களாலும், வியாபாரிகளாலும் அந்த விளை பொருட்கள் வாங்கப்பட்டு பல மடங்கு லாபத்திற்கு பொதுமக்களிடத்தில் விற்கப்பட்டு வந்தது.

விவசாயிகள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இந்த உழவர்சந்தை திட்டத்தை மேம்படுத்த உள்கட்டமைப்பு வசதி செய்யாமல் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

உழவர்சந்தைகளுக்கான சரியான நிர்வாக அமைப்பு இல்லாததால், பல பகுதிகளில் தமிழக அரசால் திறக்கப்பட்ட உழவர்சந்தைகள் பெரும்பாலும் செயல்படாமல் முடங்கியுள்ளது. லட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் உழவர்சந்தை திட்டம் மீண்டும் சிறப்பாக செயல்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு உழவர்சந்தை வீதம் தமிழகம் முழுவதும் 700 உழவர்சந்தைகளை திறக்க வேண்டும். உழவர்சந்தைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.மேலும், விளை பொருட்களை விவசாயிகள் பஸ்களில் இலவசமாக கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: