கழிவு நீர் பண்ணையால் தொற்றுநோய் அபாயம்

கோவை,டிச.11: உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு பண்ணையின் குழாயில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கலெக்டரிடம் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் அமைப்பினர் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: உக்கடம் கழிவுநீர் பண்ணையில் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முறையாக குழாய் அமைக்கப்படாமல் கொண்டு செல்லபடுவதால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, இதற்கு தீர்வு காண வேண்டும், இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல, அவர்கள் அளித்த மற்றொரு மனுவில், 74 மற்றும் 75 வது வார்டுகளுக்கு உட்பட்ட ஜி.எம்.நகர், அன்பு நகர், காந்தி நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. உக்கடம் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பெரும்பாலானோர் இந்தப் பகுதி வழியாக செல்வதாலும், சாலைகள் சரி இல்லாத காரணத்தாலும், விபத்துகள் ஏற்படுவதாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. கோவை, தடாகம் சாலை, திருவள்ளுவர் நகரில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும்,  இதனால் போர்க்கால அடிப்படையில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருவள்ளுவர் நகர் பிருந்தாவன்வீதி மனை உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: