வாரச்சந்தை இடமாற்றும் முடிவு பரிசீலனை செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 11: அந்தியூர் வாரச்சந்தையை இடமாற்றம் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்தியூர் பேரூராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கிறது. இந்த சந்தைக்கு அந்தியூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள், வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த சந்தை செயல்பட்டு வரும் இடத்தை வேறு பயன்பாட்டிற்கு பேரூராட்சி நிர்வாகம் எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதால், சந்தையை காலி செய்யும்படி வியாபாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் சந்தை நடத்த வசதியாக மலைக்கருப்புசாமி கோயில் அருகில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தருவதாக பேரூராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வியாபாரிகள் சந்தையை இடமாற்றம் செய்தால், வியாபாரம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்தியூர் வாரச்சந்தையை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: