வாழ்த்து அட்டைகளுக்கு மீண்டும் மவுசு கூடுகிறது

ஈரோடு, டிச. 11:  தமிழகத்தில் வாழ்த்து அட்டைகளுக்கு மீண்டும் மக்களிடத்தில் வரவேற்பு அதிகரித்ததால், ஈரோட்டில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் செல்போன் ஆதிக்கம் வருவதற்கு முன் புத்தாண்டு, பிறந்தநாள், பொங்கல் பண்டிகை, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் வாழ்த்து அட்டைகள் மூலம் மக்கள் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் தற்போது நாகரீக மாற்றம் மற்றும் வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் பார்வேடு மெசேஜ் மட்டுமே பதிவிட்டு வருகின்றனர். இதனால் வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு மிகவும் குறைந்தது. இந்நிலையில் தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடைகளில் வாழ்த்து அட்டைகள் அதிகளவில் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். மக்களும் ஆர்வத்துடன் வாழ்த்து அட்டைகளை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வாழ்த்து அட்டை விற்பனையாளர் சீனிவாசன் கூறியதாவது:  தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வாழ்த்து அட்டை விற்பனை மிகவும் சரிவடைந்தது. ஸ்மார்ட் போன்களின் வரவால் வாழ்த்து அட்டை கலாச்சாரத்தை மக்கள் மறந்து விட்டனர். ஆனால் வாழ்த்து அட்டை கடந்த ஆண்டில் இருந்து மீண்டும் மக்கள் அனுப்ப துவங்கியுள்ளனர். தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏராளமான டிசைன்களில் வாழ்த்து அட்டைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தற்போது வாழ்த்து அட்டை ரூ.50 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி., பிரச்னையின் காரணமாக வாழ்த்து அட்டை தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பேப்பர், டிசைன் பேப்பர்ஸ், பிரின்டிங் சார்ஜ் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதால் 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.விலை உயர்ந்துள்ள போதிலும், வர்த்தக நிறுவனங்கள், சங்கங்கள், மகளிர் அமைப்புகள், தற்போது வாழ்த்து அட்டைகளுக்கு ஆர்டர் கொடுத்து வருவதால், விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது என்றார்.

Related Stories: