மணல் திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஈரோடு, டிச. 11: தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் வீரபத்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் பாபு கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த கூட்டத்தில் ஈரோடு மாநகர பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிந்த பகுதியில் ரோடுகளை சீரமைக்காததால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த ரோடுகளை உடனடியாக தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கோபி பகுதியில் பவானி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலமாக மணல்  திருட்டு நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் மணல் திருட்டை கண்டித்து கோபி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் குமரவடிவேல், மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன், புறநகர் மாவட்ட தலைவர் ராஜேஸ், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட ஆலோசகர்கள் செபாஸ்டின், விஜயகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காமாட்சிகண்ணன், மாவட்ட கௌரவ தலைவர் சுகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: