ஆவடி அந்தோணி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வழிந்தோடும் கழிவுநீரால் தொற்று நோய் அபாயம்

ஆவடி, டிச.11: ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட அந்தோனி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆவடி நகராட்சி 13வது வார்டு திருமுல்லைவாயல் பகுதியில் அந்தோணி நகர் உள்ளது. இங்குள்ள 13 தெருக்களில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 1200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 15 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கிலிருந்து கழிவுநீர் வெளியேறி  தெருவில் ஓடுகிறது. இதனால் மக்கள் தெருவில் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கூறுகையில், அந்தோணி நகர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செப்டிக் டேங்கில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவுநீர் சாலை வழியாக வழிந்தோடி காலி இடங்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் பிரதான சாலை வழியாக நடந்து செல்ல முடியவில்லை.

இதோடு மட்டுமல்லாமல், கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்கள் மக்களை கடிக்கின்றன. இதனால் குடியிருப்பு வாசிகள் டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து, இவர்கள் ஆவடி சுற்று வட்டாரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீரில் ஆடு, மாடுகள், பன்றிகள் படுத்து புரண்டு எழுகிறது. அப்போது, கழிவுநீரிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தை குடியிருப்புவாசிகள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து சமூக நல ஆர்வலர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளனர். இருந்தபோதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

எனவே, இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுக்கு மாடியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்,   காலி இடங்களில் குளம் போல் தேங்கி நிற்கும் நீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி அப்புறப்படுத்துவதுடன் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை வேண்டும் என்றனர்.

Related Stories: