மொபட் பெட்டியை உடைத்து ₹3 லட்சம் கொள்ளை வழக்கில் வடமாநில வாலிபர் கைது

அம்பத்தூர், டிச.11: அம்பத்தூர் காவல் நிலையம் அருகே துப்புரவு சூப்பர்வைசரின் மொபட் பெட்டியை உடைத்து ₹3லட்சத்தை கொள்ளையடித்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர், சலவையாளர் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரி (39). இவர், மதுரவாயல் அருகே வானகரம் முதல்நிலை ஊராட்சியில் துப்புரவு பணியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். கடந்த 6ம் தேதி ஹரி, கட்டி வந்த ஏலச்சீட்டு முடிந்தவுடன் அதற்குரிய தொகையான ₹3லட்சம் ரொக்கத்தை வாங்கியுள்ளார். இதனை, ஹரி மொபட் பெட்டியில் வைத்து கொண்டு வில்லிவாக்கம் ஒன்றிய அலுவலத்துக்கு தபால் வாங்க வந்துள்ளார். அங்கு, அவர் அலுவலகம் முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர், மீண்டும் அவர் தபால் வாங்கி கொண்டு திரும்பி வந்துள்ளார். அப்போது, அவரது மொபட் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த ₹3லட்சம் பணத்தை காணவில்ைல. அதை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது தெரிந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகள் மூலம் மொபட் பெட்டியை உடைத்த கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்தது. இது தொடர்பாக பூந்தமல்லி, குளக்கரை தெருவில் வசித்த ஹரி மாத்தையா பிரதாப் சிங் (41) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை போலீசார் அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி இரவு புழல் சிறையில் அடைத்தனர். இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு வாலிபர் தேவானந்தா சிங் (40) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர், ₹2 லட்சத்துடன் பீகார் மாநிலத்திற்கு தப்பிச் சென்று விட்டார் என போலீசார் தெரிவித்தனர். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: