மெரினா கடற்கரையை தூய்மையாக்கும் திட்டம் தயாரிக்க மாநகராட்சிக்கு கெடு : உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை, டிச. 11: மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை  மாநகராட்சிக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், மாநகராட்சி வக்கீலிடம், மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் அருகில் சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் இயங்கி வருகின்றன. இது சாலையில் செல்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மெரினா கடற்கரைக்கென்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மார்கெட் அமைக்கப்பட்டுள்ளதா? மீனவர்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது?. இதுவரை எத்தனை மீனவர்கள் கடை அமைக்க மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. என்பது குறித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியவர்களின் விவரங்கள் குறித்தும் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை மாநகராட்சிக்கு கால அவகாசம் தருகிறோம். அதன் பிறகு தூய்மை படுத்தும் திட்டத்தை மாநகராட்சி ஆரம்பிக்க வேண்டும். இந்த பணிகளை நாங்களும் கண்காணிப்போம்.திட்ட அறிக்கையை தாக்கல் செய்ததிலிருந்து இந்த வழக்கு முடியும்வரை மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராகி மெரினா கடற்கரை தூய்மை நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். மீனவர் சங்கங்கள் தொடர்பான விபரங்களை, அதாவது, அங்கீகரிக்கப்பட்ட மீனவ சங்கங்கள், அவற்றின் உறுப்பினர்கள், எத்தனை பேருக்கு உறுப்பினர் அட்டை தரப்பட்டுள்ளது என்பது குறித்து மனுதாரர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சென்னை மாநகராட்சியும், அரசும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் பேசி உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணை வரும் 17ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: